டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது ஆம் ஆத்மி. அந்த வகையில், இன்று தமிழகம் வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான சிங்கும் வந்திருந்தார். இருவரையும் சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ” நான் டெல்லி செல்லும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதுண்டு. டெல்லியில் மாடல் பள்ளி போன்று தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்” என்றார்.
பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ” டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முழு சுதந்திரம் இல்லையென்றால் அரசை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நெருக்கடிகள் கொடுத்து வரும் நிலையில் ஒன்றாக சேர்ந்து மாநில அரசுகள் இதை எதிர்க்க வேண்டும். அந்த வகையில் இன்னும் பல மாநில அரசுகளை சந்தித்து இந்த பிரச்சனையை எதிர் கொள்ள அரவிந் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.