பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கிறது என திமுக மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்திருக்கிறது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல அடாவடியாகக் கைது செய்திருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன?

உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என்றும், பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.