சாலை விபத்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை யாஷிகா ஆனந்த்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது செங்கல்பட்டு நீதிமன்றம் .
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை யாஷிகா தனது தோழி வள்ளிசெட்டிபாவனி ,ஆண் நண்பர்கள் அமீர் சையத் வயது 31 ஆகியோர் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12:00 மணி அளவில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக ஒரு சொகுசு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்தார். மாமல்லபுரம் அருகே சுலேரிகாடு என்ற இடத்தில் கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் அவர்களது வாகனம் சுக்கு நூறாக நொறுங்கி யாஷிகாவின் தோழியான வள்ளிசெட்டிபாவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் தோழர்களும் விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்கிக்கொண்டனர் .
அவர்களது அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் வாசிகள் மாமல்லபுரம் போலீசுக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை வாகனத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த மூவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தில் யாஷிகாவிற்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது குணமடைந்து கடந்த சில மாதங்களாகத் திரைப்படங்களில் ஒப்பந்தமாகித் தொடர்ந்து நடித்துவருகிறார் .
இதனிடையே மகாபலிபுரம் காவல்துறை பதிவு செய்த விபத்து வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 21 ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது . ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . ஏப்ரல் 25ஆம் தேதி நடக்க இருக்கும் விசாரணைக்கு யாஷிகா ஆனந்த் ஆஜராகாத பட்சத்தில் காவல்துறையினர் யாஷிகாவை கைது செய்வதற்கும் வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .



Leave a Reply
You must be logged in to post a comment.