சேலம் மாவட்டம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஓரு இடத்தில் கூட அதிமுக பற்றியும், எடப்பாடி பற்றியும் பேசாமல் வாய்மூடி இருந்ததால் உள்ளூர் பாஜவினர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடைபயணம் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அவர் சென்றார். நடைபயண பாத யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது, ஒன்றிய அரசின் திட்டங்கள், எதிர்க்கட்சிகள் பற்றி பேசியுள்ளார். இதற்கு முன் நடைபயண பாத யாத்திரை சென்ற இடங்களில் கூட அதிமுகவை பற்றி அண்ணாமலை பேசினார். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் ஓரு இடத்தில் கூட அதிமுக பற்றியோ, எடப்பாடி பழனிசாமி பற்றியோ வாய் திறக்கவில்லை. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ‘‘பாஜக உடனான கூட்டணி முறிவு முறிவு தான். இனி அவர்களுடன் கூட்டணி எப்போதும் கிடையாது,’’ என பகிரங்கமாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும், தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜக அரசு நடத்துகிறது. இதனால், உடனடியாக வெள்ள பாதிப்பிற்கு அரசு கேட்கும் நிதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இப்படி பாஜக பற்றியும், ஒன்றிய அரசை பற்றியும் எடப்பாடி பழனிசாமி பேசியதால், அவருக்கு அவரது சொந்த ஊரான சேலத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுப்பார் என கட்சியினர் நம்பியிருந்தனர். ஆனால், சேலத்தில் ஒரு இடத்தில் கூட அதிமுக பற்றியும், எடப்பாடி பழனிசாமி பற்றியும் வாய் திறக்காமல் அண்ணாமலை மவுனமாக இருந்தார். அதனால் உள்ளூர் கட்சிக்காரர்கள் என்னவாக இருக்கும் என பெரிய ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் சிலர் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேலிடம் போட்ட திடீர் உத்தரவின் காரணமாக அதிமுக, எடப்பாடி பழனிசாமி பற்றி தலைவர் பேசவில்லை என சில முக்கிய நிர்வாகிகள் கீழ்மட்ட தொண்டர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வெளிப்படையாக அதிமுகவுடன் கூட்டணி இல்லை என இருவரும் கூறி வந்தாலும், உள்ளுக்குள் ஒரு உடன்படிக்கை போட்டுக்கொள்ள ரகசிய திட்டம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, அதிமுக போட்டியிடும் இடங்களில் பாஜக கூட்டணியினரும், பாஜக கூட்டணியினர் போடும் இடங்களில் அதிமுகவும் போட்டியிடாமல் இருக்க ஒரு தொகுதி பிரிப்பு உடன்படிக்கை போட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தான், சேலம் மாவட்டத்தில், ஏன் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் கூட அவரை பற்றியும், அவர் மீது ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் கூறும் குற்றச்சாட்டுகள் பற்றியும் வாய் திறக்காமல் அண்ணாமலை பேசி வந்திருக்கிறார் என்பது பாஜகவினரின் குமுறல்.
Leave a Reply
You must be logged in to post a comment.