அதிமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைவதற்கான முயற்சியை மேற்கொள்வது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “ஓபிஎஸ் நினைக்கலாம், ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது, வெண்ணிற ஆடை நிர்மலா எதிர்த்து போட்டியிட்டதற்கு சீஃப் ஏஜென்ட் ஆக ஓபிஎஸ் இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால், ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.

இவர் எப்படி விசுவாசமாக இருப்பார்? அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அதிமுகவில் அவர் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை” என கூறினார். அதை தொடர்ந்து, அண்ணாமலை தன்னை துரோகி என்று கூறியது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.

அதற்கு, அண்ணாமலை தான் பச்சோந்தி, நான் துரோகி அல்ல. துரோகியின் மொத்த உருவமே அண்ணாமலை தான். எங்கள் தலைவர்களை அவதூறாக கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்துக் கொள்வோம். எங்களை ஆளாக்கிய தலைவர்களைப் பற்றி பேசினால் எங்களுக்கு எப்படி உள்ளக்குமுறல் வரும்.
இவர் கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர். நாங்கள் அவரைப் போல் அப்பாயின்மென்டில் வரவில்லை. கண்ணாடியில் முகத்தைப் பார்த்து அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என கடுமையாக சாடினார். அதை தொடர்ந்து பேசிய அவர்,

“கள்ளச்சாராயம் விவகாரத்தை மாநில அரசு விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது என்பது எனக்கு வந்த தகவல். எனவே, படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும்” என கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.