சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், சென்னை பெருநகர காவல் இணை ஆணையர் சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.
இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை வாரந்தோறும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள் முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளர் ராஜூ, அதிமுக முன்னாள் நிர்வாகி சுதாகர், முக்கிய குற்றவாளி சதீஷ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக கூறினார்.
சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோ வெளியான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும், சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவெக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இழப்பீடுக்கோரி சிறுமியின் தாய் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் அது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி அதனை பரப்பியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.