சிவகங்கை தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்து எச்.ராஜாவின் கனவை அண்ணாமலை உடைத்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர். பாஜகவில் அதிக வயதுள்ள (72) பொன். ராதாகிருஷ்ணனுக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுயிலும், சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியிலும், ஏ.பி.முருகானந்தம் திருப்பூர் தொகுதியிலும், தஞ்சாவூர் தொகுதியில் கருப்பு எம்.முருகானந்தமும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜனை, உடனடியாக கட்சியில் சேர்த்து தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன் தன்னுடைய கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு கூட விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாஜக தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட 7 பேர் குழுவில் இடம் பெற்றிருந்த எச்.ராஜாவுக்கு மட்டும் சீட் வழங்கப்படவில்லை.

பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட கட்சியில் மிகப்பெரிய பதவியில் இருந்த எச்.ராஜாவின் பெயர் இடம் பெறவில்லை. பின்னர் வழக்கமாக தான் போட்டியிடும் சிவகங்கை தொகுதி தனக்கு கிடைக்கும் என்று எச்.ராஜா எதிர்பார்த்தார்.
ஏனென்றால் அந்த தொகுதியில் எச்.ராஜா 1999, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டார். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த தொகுதி பாஜகவின் கூட்டணி கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். தான் போட்டியிட முடிவு செய்து இருந்த தொகுதியை வேறு ஒருவருக்கு தாரை வார்த்து கொடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது எச்.ராஜா கடும் கோபத்தில் இருந்து வருகிறார். பாஜகவை வளர்த்த தனக்கு சீட் இல்லையா? என்று அவர் கடும் வருத்தத்தில் இருந்து வருகிறார்.
அப்போது தன்னை விட கட்சியில் ஜூனியர்களுக்கு சீட் வழங்கும் போது, நான் எந்த வகையில் குறைந்து போய் விட்டேன் என்று கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். ஏற்கனவே, தன்னுடன் பாஜகவில் பணியாற்றி வந்த இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கவர்னர் ஆக்கப்பட்டனர்.

தனக்கும் கவர்னர் பதவி கிடைக்கும் என எச்.ராஜா நினைத்து இருந்தார். ஆனால், கடைசி வரை அவருக்கு கவர்னர் பதவியும் வழங்கப்படவில்லை. இப்போது எம்பி சீட்டும் கிடைக்கவில்லை.
தற்போது எச்.ராஜாவுக்கு 67 வயது ஆகிறது. இனிமேல் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூட சீட் கிடைக்குமா? என்பதும் சந்தேகம் தான். அதேபோல எம்பி கனவும் பாழாகி விட்டது. எச்.ராஜாவின் அரசியல் வாழ்க்கை ‘இலவு காத்த கிளி போல’ ஆகிவிட்டதே என்று அவரது ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.