
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலைக்கு அடுத்தபடியாக உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவதை நாம் அறிந்திருக்கிறோம். அதேபோன்று கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடலூர் மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் நடைபெற்று வருவதுண்டு.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருக்கின்ற பொழுது தற்போது உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வு 18 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். திருநங்கைகள் சுமார் 10 நாட்களாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தங்கி இருந்து கோவிலுக்கு சென்று வருவது வழக்கம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி. மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் ஆனி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும் திருமணநல்லூர் நெய்யூர் பெரியசெவலை அடையார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம் கோயிலுக்கு வருவதுடன் பொங்கல் இட்டு வழிபடுவதும் உண்டு.
அந்த வகையில் இக்கோவிலில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன், ஆனி பெருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நேற்றைய தினம் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், திரளானப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அப்போது, பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த நிலக்கடலை, மாங்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய், என தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும் சுவாமிக்கு சூறையாடி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, இன்று அழுகளம் நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக விரதம் இருந்து கூத்தாண்டவர் கோயிலில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
நாளைய தினம் மஞ்சள் நீராட்டுடன் இந்த ஆனி பெருவிழா நிறைவடைகிறது.இந்த தேர் திருவிழா மற்றும் தீமிதி விழாவில் சி.மெய்யூர் கிராமம் மட்டுமின்றி, அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் நலன்கருதி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் சில நாட்களில் ஆடி மாதம் துவங்குவதற்கு நிலைகளில் பல கிராமங்களில் அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருவார்கள். எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அரசின் அறிவிப்பாகவே இருந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.