அரியலூர் மாவட்டத்தில் திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு திரைப்பட நடிகர்கள் வேடமிட்டு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில், நடன கலைஞர்கள் எம்.ஜி.ஆர், விஜயகாந்த், அம்மன் வேடமிட்டு வந்து, திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட திரைப்பட மேடை நடன கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களது வாழ்வாதாரமாக உள்ள மேடை நடன கலை நிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இவ்வகையான மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படி, மேடை நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

எங்களது நிகழ்ச்சியில் ஆபாசமோ, ஜாதி, இன மோதல்களை தூண்டும் வகையில் நடனமோ, எந்த ஒரு சமூக மக்களையும் இழிவுபடுத்துவதும், ஒரு சாரார் சமூக மக்களை தூக்கிப்பிடிப்பதும், எங்களது மேடை நடன நிகழ்ச்சியில் கடைபிடிப்பதில்லை.

நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைவரின் வழிகாட்டுதல் படி நடத்தி வருகிறோம். எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், வருகிற திருவிழா காலங்களில் மேடை நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, காவல்துறையுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.