நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். ஊழல் எதிர்ப்பை பிரதான இலக்காக கொண்டு கட்சி தொடங்கிய அவர் திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவினாலும் நகர் புறங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றார். அடுத்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். கோவை தெற்கு தொகுதியில் நின்ற கமல்ஹாசன், பாஜகவின் வானதி சீனிவாசனிடம் சில நூறு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில், கமல்ஹாசன் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதனை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருந்த நிலையில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது.
தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருகிறார். ராகுல் காந்தியை அவரது நடை பயணத்தில் சந்தித்த கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கைகளையும் பாராட்டி இருந்தார். இந்தியன் -2, கல்கி 2898 AD படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ளது. முன்னதாக இன்று புதுச்சேரி மாநில அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “கட்சியின் கட்டமைப்பு பற்றியும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்தாலோசித்தோம். கூட்டணி குறித்து பல கட்சிகள் பேசி வருகிறார்கள். நாங்கள் இன்னும் கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் போட்டியிடும் தொகுதி குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
ராமர் கோயில் பற்றிய கேள்விக்கு, “ராமர் கோயில் குறித்து 30 வருடங்களுக்கு முன்பாகவே நான் கருத்து தெரிவித்துள்ளேன். அந்த கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். ஆகவே, புதிதாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை” என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.