சேதம் அடைந்த பயிர்கள் அனைத்திற்கும் விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் உறுதி.
விருதுநகர் மாவட்டம், அடுத்த உள்ள அருப்புக்கோட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 15,000 ஹெக்டர் அளவு மக்காச்சோளம், கம்பு, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இந்த பயிர்களில் சுமார் 7,000 ஹெக்ட்டர் அளவு பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பாலவநத்தம் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பயிர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை அமைச்சரிடம் எடுத்துக்காட்டினார். அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதியில் சேதமான பயிர் சேத விவரங்களை அமைச்சரிடம் எடுத்துக் கூறினர். மேலும் ஏராளமான விவசாயிகள் கோரிக்கை மனுக்களையும் வழங்கினர். அப்போது விவசாயிகளிடம் அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசுகையில்;

முதலமைச்சர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் பார்வையிடப்பட்டு, பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கிட பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களில் பாதி அளவு பயிர்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை செய்து வருகிறோம். பயிர் காப்பீடு நிவாரணம் என்பது வேறு மழை வெள்ள நிவாரணம் என்பது வேறு என கூறினார். மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.