ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் என 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒன்றிய, மாநில அரசின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் இருந்து அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக தெப்பக்குளம் தலைமை தபால் நிலையம் வரை வந்து அங்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட டெல்டா மாவட்டம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்டதாக 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரை சேர்ந்த 250 பெண்கள் உள்பட 650க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும் ஊட்டி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, திருப்பூர், உடுமலை, அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம், தாராபுரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் ஒன்றிய அரசு அலுவலகங்ககை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தின் சுமார் 2400 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக சேலம், தர்மபுரி, நாமக்கல், ராசிபுரம், திருசெங்கோடு, ஓசூரில் ஒன்றிய அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2000க்கும் மேற்படோர் கைது செய்யப்பட்டனர். வேலூர் தலைமை தபால் நிலையம், குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில், திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகே, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், திருப்பத்தூர், ஆம்பூர் ரயில் நிலையம், வாணியம்பாடி,

ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 1900 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை, திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை, சாணார்பட்டி, ஆயக்குடி, தொப்பம்பட்டி, , சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் 4,500 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் கடைகளை அடைத்து பந்த் நடைெபற்றது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் இயற்றி, அதனை இந்திய ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தலைவர் ஹல்தரை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் உருவபொம்மையை எரித்தனர். இதேபோல் புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பிலும் நேற்று காவிரி ஆணைய தலைவர் ஹல்தரின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.