தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் விலையை காட்டிலும், புதுச்சேரியில் மலிவு விலைக்கு மதுபானங்கள் கிடைக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் அங்கு பல வகையான மதுபானங்கள் புழக்கத்தில் உள்ளது. இதனால் பொதுவாக புதுச்சேரி என்றாலே மதுப்பிரியர்களுக்கு ஒரு குதூகுலம் தான்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் புதுச்சேரி மதுபான வியாபாரிகள் அங்கு வரும் மதுபிரியர்களை தங்களது கடைகளுக்கு அழைத்து செல்வதற்காக அனைத்து பேருந்து நிறுத்தங்களில் இருந்தும் தங்களது மதுபான கடைகளுக்கும், சாராய கடைகளுக்கும் இலவசமாக ஆட்டோ இயக்குவதாக கூறப்படுகிறது. இதை ஒரு வியாபார உத்தியாகவே பார்க்கப்படுகிறது
இந்த நடைமுறை புதுவையில் மட்டும் அல்ல சாராய கடைகளுக்கு கடலூரில் இருந்தும் இலவச ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் மது அருந்துவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்து செல்வார்கள். அங்கு குறைந்த விலைக்கு மது விற்கப்படுவதால் புதுவையில் இருந்து அதிக மது பானங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தடுக்க கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வழக்கம் போல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 58 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட பல போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் மது விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் மதுபானங்கள், சாராயம் கடத்தல் மற்றும் விற்றதாக 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தலை தடுக்க ஆல்பேட்டை சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வழக்கும் போல் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஆட்டோவை வழி மறித்தனர். அப்போது அதில் 4 பேர் மதுபோதையில் இருந்தனர். மேலும் அவர்கள், சில சாராய பாக்கெட்டுகளையும் வைத்திருந்தனர். இதை பார்த்த போலீசார், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அப்போது மது பிரியர்கள் சாராய பாக்கெட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என போலீசாரிடம் கெஞ்சி கையெடுத்து கும்பிட்டனர்.
ஆனால் சாராய பாக்கெட்டுகளை போலீசார் சாலையில் கொட்டி அழித்தனர். கஷ்டப்பட்டு வாங்கிய சாராயத்தை வீணாக்கிவிட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து போலீசார், சாராயம் குடித்தால் உடலுக்கு கேடு என்று அறிவுரை வழங்கியதுடன், இனி இதுபோன்று புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் சாராய பாக்கெட்டுகள் கேட்டு மதுபிரியர்கள் போலீசாரிடம் கெஞ்சிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.