Ajith(அஜித்) நடிகர் பொன்னம்பலம் உதவி கேட்டதையடுத்து அதனை அஜித் உடனடியாக நிறைவேற்றிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். கடைசியாக வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு தயாராகிவருகிறார் அஜித்குமார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்குமார் எப்போதும் மீடியா பக்கம் தலை காண்பிக்காதவர். அவருக்கு நடந்த சில கசப்பான அனுபவங்களால் இந்த முடிவை அஜித் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. தனக்கென ஒரு வட்டம் போட்டு அந்த வட்டத்திலிருந்து வெளியே வராமல், பிறரையும் உள்ளே விடாமல் இருப்பவர் அஜித் என பொதுவான கருத்து கோலிவுட்டில் எப்போதும் உண்டு. அதேசமயம் அஜித்குமார் பலருக்கு பல உதவிகளை செய்தவர் என்றும் பலர் கூறியிருக்கின்றனர்.
ஆனால் நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் உடல்நிலை சரியில்லாத போது எனக்கு தனுஷ், சிரஞ்சீவி உள்ளிட்டோர் உதவியிருந்தனர். தனுஷ் நான் கேட்டதைவிட பத்து மடங்கு அதிகம் பணம் கொடுத்து உதவி செய்தார். இலவசமாக உயர்தர சிகிச்சை கிடைப்பதற்கு சிரஞ்சீவி உதவி செய்தார். அதேசமயம் அஜித்தை என் தம்பி போல் நினைத்தேன். ஆனால் அவர் எனக்கு உதவவில்லை என பேசியிருந்தார்.
பொன்னம்பலத்தின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி அஜித் பொன்னம்பலத்துக்கு உதவி செய்திருக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறினர். அதேசமயம், அஜித் எதற்காக பொன்னம்பலத்துக்கு உதவ வேண்டும். என்ன கடன்பட்டிருக்கிறார் என பயில்வான் ரங்கநாதன் போன்றோர் அஜித்துக்கு ஆதரவாக நின்றனர். மேலும் விஜய்யும்தான் உதவி செய்யவில்லை அவரையும் சொல்ல வேண்டியததுதானே என அஜித் ரசிகர்கள் வாள் சுழற்றினர்.

இந்நிலையில் பொன்னம்பலத்துக்கு அஜித் செய்த உதவி குறித்த புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்த படம் அமர்க்களம். இந்தப் படத்தின்போதுதான் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அமர்க்களம் பட ஷூட்டிங்கின்போது பொன்னம்பலம் அஜித்திடம் சென்று தனது நண்பரின் மகனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ஆனால் அவ்வளவு செலவு செய்ய அவரிடம் வசதி இல்லை என கூறினாராம்.
உடனே அவரிடம் அந்த சிறுவனின் மெடிக்கல் ரிப்போர்ட், மருத்துவமனை பில் விவரம் என அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டு மீண்டும் ஷாட்டுக்கு சென்றுவிட்டாராம். ஷாட்டை முடித்துவிட்டு வந்த அஜித்தின் அருகில் சென்று மீண்டும் அதுகுறித்து பேசிய பொன்னம்பலத்திடம், அந்தத் தொகையை கட்டிவிட்டேன். மருத்துவமனையிலும் பேசிவிட்டேனே என்றாராம். அஜித் உதவவில்லை என பொன்னம்பலம் சமீபத்தில் கூறியிருந்த சூழலில் இப்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவருகிறது. மேலும் அஜித்திடம் தனக்கு உதவி வேண்டும் என கேட்டிருந்தால் நிச்சயம் அவர் உதவியிருப்பார். ஆனால் பொன்னம்பலம் அஜித்திடம் கேட்காமல் இருந்திருப்பார் அதனால்தான் அஜித்தால் உதவியிருக்க முடியாது எனவும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.