சில தினங்களுக்கு முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக தனது மகள் சுப்ரியா சுலேவை நியமித்த சரத் பவார் , அவரது கட்சியில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று சற்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார் . சரத் பவாரின் இந்த நடவடிக்கையால் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியலில் ஒரு புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு வியத்தகு அரசியில் மாற்றத்தில் , தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் எதிர்க்கட்சி கூட்டணியான மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணியில் இருந்து விலகி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் அரசில் இணைந்த அவர் , துணை முதல்வராக பதவியேற்றார். அவர் தனது பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.

இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக ஏக்நாத் ஷின்டேவும் , துணை முதல்வராக அஜித் பவார் மற்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகிய மூன்று தலைமையில் ஆட்சி நடத்தப்படும் .
ஞாயிற்றுக்கிழமை , அஜித் பவார் தன்னுடைய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏக்களுடன் ஆளும் சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டணியில் இணைந்துள்ளார்.
முன்னதாக கடந்த புதன்கிழமையன்று மும்பையில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அஜித் பவார், “எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, ஆனால் கட்சி எம்எல்ஏக்களின் கோரிக்கையின் பேரில் அந்த பங்கை ஏற்றுக்கொண்டேன். கட்சி அமைப்பில் எந்தப் பதவியையும் எனக்கு ஒதுக்குங்கள், எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து முடிப்பேன்” என்று பேசிய நிலையில் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்த இருப்பது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் .
ஷிண்டே அரசில் இணைந்த பிறகு, பிரதமர் மோடியைப் பாராட்டிய அஜித் பவார், அவரது தலைமையில் நாடு முன்னேறி வருவதாகக் கூறினார். “பிரதமர் மோடி மற்ற நாடுகளிலும் பிரபலமானவர். அனைவரும் அவரை ஆதரிக்கிறார்கள் மற்றும் அவரது தலைமையைப் பாராட்டுகிறார்கள்” என்று அஜித் பவார் பேசியுள்ளார் .

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் காட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தது . நாட்போக்கில் சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்ததால் சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்துஉத்தவ் தாக்கரே புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமரிசனம் மற்றும் பிரச்சாரம் செய்து வருகிறார் .
இதனிடையே ஒரே கூட்டணியில் இருந்தாலும் பாஜவினர் ஏக்நாத் ஷிண்டே அணியினரை மதிப்பதே இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது , இதனால் ஷின்டே ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர் .
இந்த நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும், சர்த் பவாரின்அண்ணன் மகனுமான அஜித் பவார் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.