தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் முன்பாக சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு பள்ளியைப் பூட்டி விட்டு தாளாளர் தலைமறைவு , பரிதவித்த குழந்தைகள்.
தேனி மாவட்டம் தேனி திட்டச்சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 30 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் சென்றாயபெருமாள் என்ற தலைமை ஆசிரியரும், சுமதி என்ற ஆசிரியையும் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியின் தாளாளராக அன்பழகன் என்பவர் உள்ளார். அன்பழகன் தேனி அல்லிநகரத்தில் செயல்பட்டு வரும் முத்தையா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அன்பழகன் அரசு உதவி பெறும் பள்ளியை நடத்தி வருவதை மறைத்து, மற்றொரு அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் சென்றபோதும் அவர்கள், அன்பழகனிடம் பணம் பெற்றுக் கொண்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தன்னைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் அளிப்பது, தனது பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வரும் சென்றாயபெருமாள் மற்றும் சுமதி தான் என நினைத்து அவர்களை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் இவர்களுக்குப் பல மாதங்கள் சம்பளம் வழங்காமலிருந்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர்கள் தற்போது அரசு மூலம் நேரடியாகச் சம்பளம் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகலில் பள்ளிக்கு வந்த தாளாளர் அன்பழகன் பள்ளி மாணவர்கள் முன் தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாளிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் திடீரென தலைமை ஆசிரியர் சென்றாய பெருமாளைக் கீழே தள்ளி விட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இது என்னுடைய பள்ளி எனக்குச் சொந்தமானது, இங்கே யாரும் இருக்கத் தேவையில்லை என்று கூறி ஆசிரியர்களை வெளியே போகுமாறு கூறியுள்ளார்.
ஆனால் பள்ளி வேலை நேரம் முடியாமல் வெளியே செல்ல மாட்டோம் என ஆசிரியர்கள் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த தாளாளர் அன்பழகன் பள்ளியின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். இதனால் வகுப்பறைகளுக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகள் அலறத் தொடங்கினர்.

இந்த நிலையில் தாளாளர் அன்பழகன் தலைமை ஆசிரியரை அடித்த காட்சிகள் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் உடனடியாக பள்ளிக்குச் சென்று செய்து சேகரித்த வந்த தகவலை அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆட்டோ மூலமாக மாணவ மாணவிகளைப் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் சென்ராயப்பெருமாள் மற்றும் ஆசிரியை சுமதி ஆகியோரிடம் கல்வித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த பள்ளி தாளாளர் அன்பழகன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. காவல்துறை அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தேனியில் வகுப்பறைக்குள் பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கி விட்டு, மாணவ மாணவிகளைப் பூட்டி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.