தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் கடந்த ஓராண்டாகவே சலசலப்புகள் ஓய்ந்த பாடில்லை. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான அதிகார மோதல், சட்டப் போராட்டங்கள், கட்சி நிர்வாகிகள் அதிரடி நீக்கம், அணிகள் தாவல் என பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது.
இதில் ஒருபடி மேலே சென்று அதிமுக அணிகளுக்குள் மட்டுமின்றி, அதிமுக டூ பாஜக, பாஜக டூ அதிமுக என கட்சி தாவும் நடவடிக்கைகளும் அரங்கேறி வருகின்றன.
இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் மைத்ரேயன்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த மைத்ரேயன் ?
மைத்ரேயன் சுதந்திர போராட்ட வீரர் கே.ஆர்.வாசுதேவன் மற்றும் மங்கா தம்பதிக்கு மகனாய் 1955ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளிப் படிப்பை சென்னையில் முடித்தார். இதையடுத்து நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் பிரிவில் எம்.டி பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழக கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் டி.எம் புற்றுநோய் படிப்பு படித்தார். அதன்பிறகு தனது மருத்துவப் பணிகளை தொடங்கினார்.
இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவ ஜர்னல்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார். இளவயது முதலே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். இது பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது.

தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் (1995- 1997), துணைத் தலைவர் (1997 – 1999), மாநிலத் தலைவர் (1999 – 2000) ஆகிய பதவிகளை வகித்தவர். கடந்த 2000ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இதையடுத்து அதிமுகவிற்கு 2016ஆம் ஆண்டு வரை ரத்தத்தின் ரத்தங்கள் உடன் இணைந்து களப்பணி ஆற்றினார். 2002 முதல் 2004 வரையிலும், 2007 முதல் 2013 வரையிலும், 2013 முதல் 2019 வரையிலும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.
ஜெயலலிதாவின் மறைவு மைத்ரேயன் அரசியல் வாழ்வை புரட்டி போட்டது. ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கிய நிலையில் அவரது அணியில் இணைந்து கொண்டார். பின்னர் ஒருங்கிணைந்த அதிமுகவில் பணியாற்றினார். மீண்டும் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது ஓபிஎஸ் அணிக்கு சென்றார். அதன்பிறகு ஈபிஎஸ் அணிக்கு மாறினார். கடைசியாக ஓபிஎஸ் அணிக்கு தாவினார். இதனால் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி தரப்பு அறிவித்தது.
தற்போது அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டு அக்கட்சியின் முகமாக எடப்பாடி பழனிசாமி மாறியுள்ளார்.

அதேசமயம் தேர்தல் ஆணையம் இன்னும் அங்கீகரிக்காததால் அதிமுகவில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த சூழலில் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பும் முடிவிற்கு மைத்ரேயன் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் தனக்கான எதிர்காலம் எதுவும் இல்லை எனக் கருதி பாஜகவில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் இணைகிறாரோ என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மைத்ரேயனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? இல்லை கட்சியில் ஏதேனும் பொறுப்புகள் அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.