சேலத்தில் அதிமுக நிர்வாகி கொல்லப்பட்டதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், “சேலம் மாவட்டம், தாதகாபட்டியை அடுத்த சஞ்சீவி ராயன் பேட்டையைச் சேர்ந்தவரும், கொண்டலாம்பட்டி மண்டலக் குழு முன்னாள் தலைவரும், கொண்டலாம்பட்டி பகுதிக் கழக செயலாளருமான சண்முகம் அவர்களை, நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சண்முகம் கொலை செய்யப்பட்டிருப்பதாக அப்பகுதியினர் சந்தேகிக்கின்றனர்.
திமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தமிழகம் முழுவதும் கொலை கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.

சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தவேண்டிய காவல்துறையோ, சுதந்திரமாக எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளையும் எடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகின்ற போதை பொருட்கள் நடமாட்டத்தையும், கள்ளச்சாராய விற்பனைகளையும் திமுக தலைமையிலான அரசு கட்டுப்படுத்த தவறினால், அதன்பிறகு தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியாத வகையில் பேரபாயத்தை ஏற்படுத்திவிடும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் கிராமத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து உடல்நிலை பாதிப்படைந்து ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஜெயராமன் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இதுவரை 65 உயிர்களை இழந்த பின்பும் கூட திமுக தலைமையிலான அரசால் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
திமுக தலைமையிலான அரசு கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக எத்தனை ஆய்வு கூட்டங்களை நடத்தினாலும், எத்தனை சட்டங்களை திருத்தினாலும் எந்த பயனும் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. தமிழகத்தில் இன்றைக்கும் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக்கொண்டு இருப்பதை தான் விழுப்புரத்தில் தற்போது உயிரிழந்துள்ள ஜெயராமனின் மரணம் உணர்த்துகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ள கழக நிர்வாகி சண்முகத்தை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய கழக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். கழக நிர்வாகி சண்முகத்தின் படுகொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதை தடுக்க தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.