சென்னையில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் : 2800 உறுப்பினர்களுக்கு அழைப்பு..!

3 Min Read

சென்னை வானகரத்தில் அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வியூகம் வகுக்கப்படலாம் என்று தெரிகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதனால் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி மஹாலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:35 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார். கூட்டம் தொடங்கியவுடன் அதிமுகவில் இந்த ஆண்டு மரணமடைந்த நிர்வாகிகள் சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் கூட்டம் தொடங்குகிறது. நாடாளுமன்றத் தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, பாமக போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தல் முடிவுக்கு பின்னர் கூட்டணி உடைந்தது.

அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

இதனை தொடர்ந்து அதிமுக பாரதிய ஜனதா இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. பாரதிய ஜனதாவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும் அவர் திமுக கூட்டணி உடையும் என்றும் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் அதிமுக பக்கம் வருவார்கள் என்றும், தொடர்ந்து ஆருடம் கூறி வருகிறார். எனவே அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுப்பதற்காக வியூகங்கள் வகுக்கப்படலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தின் கடைசியில் பேச உள்ளார். அப்போது அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடைய பேச்சு கேட்பதற்கு செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.

இந்த கூட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட 17-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இதில் திமுக அரசுக்கு எதிரான கண்டன தீர்மானங்கள் பல இருக்கும் என்றும், அக்கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தல் வெற்றிக்கு கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு அங்கீகரிக்கப்படும். மேலும் அதிமுக நிர்வாக வசதியாக அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்ற கட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான அக்கட்சியின் சட்டதிட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கான செயல்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நந்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, பென்ஜமின் மற்றும் மாவட்ட செயலாளர் கே.பி கந்தன் உள்பட நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது.

அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற உள் கட்சி தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இது ஆகும். எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்து உள்ளனர். அதிமுகவில் 2800 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்த கூட்டத்திற்கான அழைப்பிதழை அதிமுக தலைமை தனித்தனியாக அனுப்பி உள்ளது. இந்த அழைப்பிதழுடன் கூட்டத்திற்கு வர வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிப்பதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை செய்துள்ளது.

Share This Article

Leave a Reply