அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்த பின்னர் அதிமுக, பாஜகவுக்கு இடையே ரகசிய கூட்டணி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-பாஜ கூட்டணி ஏற்பட்டது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலை இணைந்தே சந்தித்தனர். அதில் மக்களவையில் அதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே கிடைத்தது. சட்டப்பேரவையில் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன.
அதன்பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன. ஆனால் திடீரென்று அதிமுகவை உடைக்க அண்ணாமலை ரகசிய திட்டம் போட்டார். இதற்காக அந்த கட்சியில் இருந்து சிலரை தன் பக்கம் இழுத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியை சீண்டும் வகையில் தொடர்ந்து பேசி வந்தார். முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி புகார் செய்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்.

அவர் சென்னை திரும்பிய ஒரு வாரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடும் என்று அதிமுக தலைவர்கள் அறிவித்தனர். ஆனால் இதுவரை பாஜக தலைவர்கள் தனித்துப் போட்டி குறித்தோ, தனி அணி அமைப்பது குறித்தோ அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றோ இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் தேர்தல் நெருக்கத்தில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்து தற்போதும் நிலவுகிறது. ஒருவேளை கூட்டணி அமைக்காவிட்டாலும், இரு அணியினரும் ரகசிய உடன்பாடு செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
அதை உண்மையாக்குவது போலவே இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசக் கூடாது என்ற ரகசிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். இதனால் இரு கட்சியிலும் கட்சிகளை தாக்கி பேசக் கூடாது என்று அறிவித்துள்ளனர். இதனால் பாஜகவை தாக்கி இதுவரை அதிமுக தலைவர்கள் யாரும் பேசுவதில்லை. அதேநேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அறிவித்த அண்ணாமலை நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறும்போது, நீங்கள் ஏன் ஊழல் குறித்து எழுதவில்லை என்று திருப்பிக் கேட்டுள்ளார்.

அவர்தான் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை வெளியிடுவதாக அறிவித்தார். அப்போது அதைப் பற்றியே வாய் திறக்க மறுப்பதோடு கேள்வி கேட்கும் நிருபர்களிடம் திருப்பி கேள்வி கேட்கிறார். அதனால் தான் அறிவித்த அறிவிப்பில் இருந்து தொடர்ந்து நழுவி வருகிறார். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். திமுக பக்கம் எப்போதும் சிறுபான்மையினர் உள்ளனர்.
இதனால் சிறுபான்மையினரை திமுகவிடம் இருந்து பிரிப்பதற்காகவும் பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை சிதறடிப்பதற்காகவும் அதிமுகவை பாஜகவே களம் இறக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான் அமித்ஷாவை சந்தித்து விட்டு சென்னை திரும்பி ஒரு வாரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இருவரும் என்ன பேசினோம், எதற்காக வெளியேறுகிறோம் என்பதை இதுவரை எடப்பாடியோ, அமித்ஷாவோ அறிவிக்கவில்லை.

இதனால் இரு கட்சியினருக்கும் ரகசிய உடன்பாடு இருப்பது உறுதி என்றும் அவர்கள் கூறுகின்றனர். இது தேர்தல் நேரத்திலும் எதிரொலிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இரு அணியினரும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசுவதில்லை. காந்தி குறித்தும் தமிழ்நாட்டை குறித்தும் கவர்னர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வேளையில் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி எந்த எதிர்ப்பையும் இதுவரை காட்டவில்லை.
அதேபோல், அதிமுக ஊழல்களை பாஜக வெளியிடுவதில்லை. அவர்கள் மீதான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருப்பது போன்றவற்றை பார்க்கும் போது அதிமுகவுடன் பாஜக ரகசிய உறவு இருப்பது நிரூபணமாகியுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையினரை திமுகவிடம் இருந்து பிரிப்பதற்காகவும் பாஜவின் எதிர்ப்பு ஓட்டுக்களை சிதறடிப்பதற்காகவும் அதிமுகவை பாஜகவே களம் இறக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.