யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து..

2 Min Read

சவுக்கு சங்கரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிா்த்து அவரது தாயாா் கமலா, சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் கொண்ட அமா்வு முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞா் ஐய்யப்பராஜ் சவுக்கு சங்கரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது உள்நோக்கம் கொண்டது. அதை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், அவதூறாகப் பேசிவந்த சவுக்கு சங்கரை எச்சரிக்கை செய்யும் விதமாகவும் அவா் திருந்த வேண்டும் என்பதற்காகவும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அதற்காக அவரை எத்தனை நாள்கள் சிறையில் அடைத்து வைத்து இருப்பீா்கள் என்று கேட்டார்.

குறைந்தது ஓா் ஆண்டு என்று ராஜ்திலக் பதில் கூறினாா்.

அதற்கு நீதிபதிகள் அரசு நடவடிக்கையில் முறைகேடு என்று ஊடகவியலாளா்கள் சொன்னால், அதை அரசு திருத்திக்கொள்ள வேண்டும்.

அதற்காக யூடியூபா்கள், ஊடகத்தினரின் கழுத்தை நெரிக்கும் விதமாக இதுபோன்ற சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது  என்றனா்.

பின்னர் அந்த வழக்கு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.

விசாரணை முடிவில் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் சவுக்கு சங்கர் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தியதாகக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை என்றனர்.

சவுக்கு சங்கர்

மேலும் சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை.

மேலும், பிற ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், சமூக ஊடகங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்திய நீதிபதிகள், சாதாரண மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியாக சமூக ஊடகங்களை அரசு கருத வேண்டுமே தவிர, அந்த ஊடகங்களை முடக்க முயற்சிக்கக் கூடாது. அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் சுதந்திர போராட்ட காலத்தில் மக்கள் விழித்துக் கொண்டு சுதந்திரம் பெற்றோம். இப்போது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறி யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Article

Leave a Reply