விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்துள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக விவசாயம் அதனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர். வேளாண்மை துறை சார்பில் தரமான விதைகள், உரம், இடுப்பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் இவர்களுக்கு தேவையான வங்கி கடன் உதவி கிடைக்கவில்லை என்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொடக்க மேலாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க மறுத்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தமிழக முழுவதும் 4474 தொடக்கம் வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வசதிகள் இடுபொருட்களான உரங்கள், வினியோகம் மற்றும் பொது விநியோக முறை கிளைகளை நடத்தி வருகிறது. இதற்காக சிறு தவணை மற்றும் நடுத்தர தவணை கடன்களை விவசாய மற்றும் இதர செயல்களுக்கு வழங்குகிறது. சிறு தவணை கடன்கள் 2 முதல் 15 மாதங்கள் மற்றும் நடுத்தர தவணை கடன்கள் 2 முதல் 15 மாதங்கள் மற்றும் நடுத்தர தவணை கடன்கள் 3 முதல் 5 வருடங்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் பயிர் கடன்கள் கொடுப்பது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முக்கிய பணி ஆகும். இதில் பதிவு செய்யப்பட்ட கரும்பு சாகுபடியாளர்களுக்கு 10 ஏக்கர் வரை கூட்டு பாதுகாப்பு இல்லாமலும் மற்றும் இதர பயிர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. கடன் அளவு இதற்கு மேல் சென்றால் சொத்துக்கள் அல்லது நகைகள் அடமானம் வைத்து அதன் மீது வழங்கப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இதர வேளாண் தேவைகளான பண்ணை, இயந்திரங்கள் வாங்குதல் விவசாயம் இல்லாத தேவைகளான நுகர்வோர் பயன்பாடு, வீட்டுக் கடன்கள், கல்வி கடன்கள் மற்றும் தொழில் கடன்கள் வழங்குகிறது.

வேளாண் பொருட்கள் விற்பனைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருதல். சமுதாய மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை கிராமப்புறங்களில் உதவி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கம் கலிவலதன் கூறுகையில்; விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. பருவமழை நன்றாக பெய்து நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் கிடைப்பதில்லை. இது பற்றி விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறோம். கூட்டுறவு வங்கியில் தலைவர் இயக்குனர்களின் தேர்தல் காலம் முடிந்த நிலையில், திமுக அரசு விரைந்து தேர்தல் நடத்தி தலைவர் இயக்குனர்களை நியமிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கடன் உதவிகளை வழங்க வேண்டும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.