ஈஷா யோகா மையத்தின் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே.பாலகிருஷ்னன்.

2 Min Read
ஈஷா யோகா மையம்

சட்டவிரோதமாக செயல்பட்ட  ஈஷா யோகா மையத்தின் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்னன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையம் சட்ட வரம்புகளை மீறியும், உரிய அனுமதிகள் பெறாமலும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்தும் பல்லாயிரம் சதுர அடி கட்டடங்களை கட்டி தொடர்ந்து விழாக்களை நடத்தி வருகின்றது. இவ்வாறு அனுமதியின்றி சட்ட விரோதமாக வன நிலங்களிலும், பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்களிலும் ஈஷா யோகா மையம் செயல்படுவதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து போராடி வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட பொருளாருமான திருமதி முத்தம்மாள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கான உரிய அனுமதி பெறவில்லை எனவும், மாவட்ட ஆட்சியரிடமிருந்தும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மலைகள் பிரதேச பாதுகாப்பு ஆணையத்திடமிருந்தும், தீயணைப்புத்துறையிடமிருந்தும் கட்டிடங்கள் கட்டுவதற்கு ஈஷா யோகா மையம் தடையில்லா சான்று பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கரை புலவம்பட்டி கிராம ஊராட்சியும் அனுமதி வழங்கவில்லை எனவும், வழிபாட்டு கட்டிடங்கள் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதியும் வழங்கவில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, ஈஷா யோகா மையத்தின் சார்பில் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்குள்  ஈஷா யோகா மையம் தன்னிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும், தவறும்பட்சத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் வி கங்காபூர்வாலா மற்றும் நீதியரசர் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் வழங்கியுள்ளனர். இத்தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இத்தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தாமதமில்லாமல் ஈஷா யோகா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மேல்முறையீட்டு நடவடிக்கைகளுக்கு ஈஷா யோகா மையம் முயற்சிக்கும்பட்சத்தில் அதனை முறியடிக்கவும் உரிய சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply