கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 527 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு டி.ஆர்.ஓ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தினத்தன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோக ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய சிறார்களில் பேசும் திறனற்றவர்களுக்கு தலா ரூபாய் 30,000 மதிப்புள்ள ஆவாஸ் மென்பொருள் அடங்கிய கைக்கணினி மூலம்பொருள் சொல்லும் உபகரணத்தை 2 மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதனை தொடர்ந்து, குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, தொழில் தொடங்க கடனுதவி, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஏரி, குளம் தூர்வாருதல், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம், காவல்துறை தொடர்பான மனுக்கள் என மொத்தம் 527 பேர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

அப்போது அந்தந்த துறை அலுவலர்களை நேரில் அழைத்து பொதுமக்கள் புகார் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். முன்னதாக கடந்த வாரத்தில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிலையில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.