கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக யாராக இருந்தாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கடந்த ஆண்டு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெற்ற மரணங்களுக்கு பின்பும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் அவர்கள், தற்போது கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்காக செயல்பட்டதாக கூறி அவர்களின் மீது எடுக்கப்பட்டிருக்கும் கண் துடைப்பு நடவடிக்கை அரசு நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
அரசு நிர்வாகத்தின் தவறை மூடி மறைக்க அதிரடி சோதனை மற்றும் கைது எனும் பெயரில் மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றாமல், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.