பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறுப்பினராகவும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகிக்கும் காஜாமலை விஜி என்பவர், மாநகராட்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை, தனது நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று, கடந்த சில நாட்களாக, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களை, நிர்வாகிகளை மாமன்ற வளாகத்தினுள்ளேயே அரிவாளுடன் வந்து மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மாமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, மாமன்ற வளாகத்தினுள் பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். இதனைப் படம்பிடித்த ஊடகவியலாளரை, அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது.

இந்த காஜாமலை விஜி என்பவர், திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளைத் தனதுநிறுவனம் பெறுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லும் இந்த காஜாமலை விஜியின் செயல்பாடுகள், அமைச்சர் கே.என்.நேருவின் ஆசியுடன்தான் நடக்கிறதா? திமுக மாமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு பணி செய்வதை விட, தங்களது வருமானத்தைப் பெருக்குவதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
மாநகராட்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும், இது போன்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் திமுக நிர்வாகிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.