புதுச்சேரி நோணாங்குப்பம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் ஆதித்தியன். இவரது மகன் விக்னேஷ்வர் வயது (24). ஏசி மெக்கானிக்கான இவர் 31 ஆம் தேதி தனது நண்பர் ராஜேஷ் என்பவருடன் புதுவை கடற்கரை சாலைக்கு சென்று புத்தாண்டு கொண்டாடினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அரியாங்குப்பம் காக்காயன்தோப்பைச் சேர்ந்த நிர்மல் (எ) நிர்மல்குமார் வயது (23), விக்கி (எ) விக்னேஷ்வரன் வயது (22) மற்றும் அவர்களது நண்பர்கள் விக்னேஷ், பிரதீப், விஷ்வா (எ) மரியவிஷ்வா உள்ளிட்டோர் இரண்டு பைக்கில் வந்துள்ளனர். அந்த சமயம், விக்னேஷ்வர் மற்றும் ராஜேஷூடன் நின்றிருந்த பெண்ணை நிர்மல்குமார் மற்றும் அவரது நணபர்கள் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து விக்னேஷ்வர் தட்டி கேட்கவே இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் காணப்பட்டது.

அப்போது விக்னேஷ்வரின் கழுத்தில் நிர்மல்குமார் ஓங்கி குத்தியதில் அவர் பேச்சு மூச்சின்றி சுருண்டு கீழே விழுந்தார். இதனை கண்ட உடனே நிர்மல்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அங்கு மயங்கி கிடந்த விக்னேஷ்வரை அவரது நண்பர் ராஜேஷ் மீட்டு, ஆட்டோ மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோழியை கிண்டல் செய்ததை புத்தாண்டு தினத்தில் தட்டிக் கேட்ட தகராறில் கொலை நடந்திருப்பது உறுதியானது என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் நிர்மல்குமார் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து விக்கி என்ற விக்னேஸ்வரனும் சரணடைந்தார். இருவரிடமும் தனித்தனியாக தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். தோழியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் நாங்கள் கழுத்தில் ஓங்கி குத்தியதில் கொலையில் முடிந்து விட்டதாக சரணடைந்த 2 பேரும் கூறியதாக விசாரணையில் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.