திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே நேற்று 50 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்த நபர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் அலமேலுமங்காபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஏ.எம்.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரகு (47) என தெரிந்தது.
கூலி தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான மாடுகளை ஏ.எம்.பேட்டை பகுதியில் உள்ள தண்டவாளத்தின் அருகே மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ரகு மீது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அதிவிரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலே ரகு பலியாகியது தெரிந்தது.
மேலும் இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரகுவிற்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஒரு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாடு மேய்த்துக் கொண்டிருந்த கூலி தொழிலாளி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.