புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா… 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு..!

2 Min Read
ஜனாதிபதி

புது டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி,நாளை திறந்து வைக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

- Advertisement -
Ad imageAd image

அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, ஆம் ஆத்மி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே அணி, சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தக் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நாடாளுமன்றத்தின் அங்கமாக இருக்கக் கூடிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு அழைக்காததன் மூலம், அவரை அவமதித்திருப்பது மட்டுமின்றி, ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம்

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பெரும் பொருட் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நாட்டு மக்களிடமோ, எம்பிக்களிடமோ கருத்து கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளன. மேலும் நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மாவை அகற்றிவிட்ட நிலையில், புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை என்றும் இதனால், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் 19 கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.அழைப்பிதழில் கூட ஜனாதிபதி பெயர் இடம்பெறவில்லை.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அத்துடன், பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதியும் காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த தினம் சாவர்க்கரின் பிறந்ததினம் என்பதால், அந்த நாளை தேர்வு செய்தது தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

இதே கருத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள அவர், ‘ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, அரசியலமைப்புச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற அவைகளின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply