சென்னையில் ஏராளமான பூங்காக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் பூங்காவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை அருகே புதிய பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் செம்மொழி பூங்கா, செங்காந்தள் பூங்கா என பல்வேறு பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ளது. பரபரப்பாக இயங்கி வரும் சென்னையில் அமைதியான இயற்கை சூழ்ந்த மனநிலையை பூங்காக்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு புதிய பூங்கா அமைக்க தயாராகியுள்ளது.
சென்னை அருகே தாவரவியல் பூங்கா:
லண்டனில் உள்ள கியூ கார்டன் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்புடன் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூர் கிராமத்தில் புதிய தாவரவியல் பூங்காவை அமைக்க
தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பூர்வீக வகை தாவரங்களை பாதுகாத்து முறையாக பராமரிப்பதே இந்த பூங்காவின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கியூ கார்டன் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விரைவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூங்காவின் சிறப்புகள் என்னென்ன?:
தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக, வருவாய்த்துறையிடம் இருந்து வனத்துறை நிலத்தை பெறுகிறது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பூங்கா அமைய இருப்பதாக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார். 8 வகையான தோட்டங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், 300 கோடி ரூபாய்க்கு அமையவுள்ள இந்த தாவரவியல் பூங்காவில் தமிழ்நாட்டின் பூர்வீக தாவர இனங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவற்றை பாதுகாத்து பராமரிக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வரும் காலத்தில் கடம்பூர் கிராமம் மிகப்பெரிய சுற்றுலா பகுதியாக மாறும் என நிச்சயமாக கூறலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.