கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற போது உண்டியலில் கை சிக்கிக் கொண்டு 12 மணி நேரமாக விடிய விடிய திருடன் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம், அடுத்த காமரெட்டி மாவட்டம் , பிக்கானூர் மண்டலம் ராமேஷ்வர் பள்ளி கிராமத்தில் மசு பள்ளி போச்சம்மா கோயில் உள்ளது. இந்த கோயிலில் பணிபுரியும் சுரேஷ் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் உண்டியலின் மேற்பகுதியை உடைத்துள்ளார்.

பின்னர் உண்டியலில் இருந்து பணத்தை திருடுவதற்காக கையை உள்ளே வைத்தார். ஆனால் சுரேஷின் கை உண்டியலில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், எப்படியாவது கை வெளியே வந்தால் போதும் என எவ்வளவோ முயற்சி செய்தும் கையை வெளியே எடுக்க முடியவில்லை.

அதை தொடர்ந்து விடிய விடிய பதட்டத்துடன் சுமார் 12 மணிநேரம் சுரேஷ் கையை வெளியே எடுக்க முடியாமல் தவித்தார். அப்போது மறுநாளான நேற்று காலை 8 மணி அளவில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்ததும் உடனே கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது கிராம மக்கள் வந்த பின்னர் போலீசார் முன்னிலையில் கேஸ் கட்டர் மூலம் உண்டியலை உடைத்து சுரேஷின் கையை உண்டியலில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர், திருட முயன்ற சுரேஷை அந்த பகுதி மக்கள் பிக்கனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.