- மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிட கோரி வழக்கு.
மதுரை சேர்ந்த ராஜா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரை மத்திய சிறையில் 1252 கைதிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் 2379 சிறை கைதிகள் இருக்கின்றனர். இதனால் கைதிகளுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அதோடு அனைத்து கைதிகளையும் ஒன்றாக வைத்திருப்பதால், காவலர்களுக்கு கண்காணிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. அதோடு சிறிய குற்றங்கள் செய்தவர்கள், பெரும் குற்றவாளிகளுடன் சேர்ந்து சமூக குற்றவாளிகளாக மாறும் அபாயம் உள்ளது.
மதுரை இடையபட்டி கிராமத்தில் புதிய மத்திய சிறையை அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 2023 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.
பின்னர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தெத்தூர் முதல் கரடிக்கல் இடையிலான பகுதி அடையாளம் காணப்பட்டது. ஆனால் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் மதுரை மத்திய சிறைக்கு புதிய இடம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிக கூட்டம் காரணமாக சிறை கைதிகள் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மாற்று இடத்தை அடையாளம் காணாமல் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் அனுமதித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான தற்காலிக நடவடிக்கைகளை எடுக்கவும், மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ” மேலூர் தெற்கு தெருவில் மாற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மதுரை சிறையை இட மாற்றம் செய்வது அவசியமானது. ஆகவே 6 மாதங்களுக்குள்ளாக சிறைச்சாலையின் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.