Nigiris- சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்களுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு

2 Min Read
  • நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்களுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு
  • ஓய்வுபெற்ற நீதிபதி குழு உத்தரவின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்
  • நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு-தனியார் ரிசார்ட்கள் தாக்கல் செய்த வழக்குகள் இரு வாரங்களுக்கு தள்ளிவைப்பு

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம், சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் ரிசார்ட்களுக்கு எதிராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இரு வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக தமிழக அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக உதகமண்டலம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்தும் அரசு உத்தரவு பிறப்பித்தது.

சேகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அறிவித்ததை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசு உத்தரவை உறுதி செய்ததுடன், சேகூர் பகுதியில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ரிசார்ட் தரப்பு குறைகளை விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு, சேகூர் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள நிலங்களை தனியார் வனமாக அரசு அறிவித்த 1991ம் ஆண்டுக்குப் பின், அந்தப் பகுதியில் நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ரிசார்ட் உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உரிய அனுமதிகளை பெற்ற பிறகு ரிசார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிலங்களை வாங்கியது செல்லாது என்று அறிவிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடியுமா? அல்லது அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி, அதை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு உத்தரவை எதிர்த்த இந்த விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என விளக்கம் அளிக்க அரசுக்கும், நீதிபதி வெங்கட்ராமன் குழுவுக்கும் உத்தரவிட்டனர்.

அப்போது ரிசார்ட்கள் தரப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு அறிக்கையின் அடிப்படையில் ரிசார்ட்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், ரிசார்ட்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி கே.வெங்கட்ராமன் குழு உத்தரவின் அடிப்படையில், இரண்டு வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Share This Article

Leave a Reply