திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே காரும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியரின் 60-வது திருமண நாளை கொண்டாடுவதற்காக நேற்றைய தினம் திருக்கடையூர் சென்று விட்டு திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெள்ளகோவிலை கடந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது ஓலப்பாளையம் என்னும் இடத்தில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சந்திரசேகர் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில் காரில் பயணித்த சந்திரசேகர் சித்ரா மற்றும் இளவரசர், அரிவித்ரா மூன்று மாத குழந்தை சாக்சி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக வெள்ளகோவில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கார் மற்றும் பேருந்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

அப்போது சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.