செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் பல வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வேலை செய்யும் தொழிலாளர்களே பெரும்பாலும் இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.இதில் ஒரு வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக வளத்தி கோவிலான்(76) மற்றும் அவரின் மனைவி எழிலரசி (54) வாடகைக்கு வசித்து வந்தனர். இந்நிலையில் வாடகை தொகை கொடுக்காததால் அதை கேட்பதற்காக வீட்டின் உரிமையாளர் ராஜேஸ்வரி இன்று காலை சுமார் 10 மணியளவில் அந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.இதனால் சந்தேகமடைந்த அவர் அருகில் உள்ள திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது பிளாஸ்டிக் ட்ரம் (Plastic Drum) ஒன்று கருப்பு நிற பிளாஸ்டிக் கவரால் மூடிவைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்து துர்நாற்றம் வீசியதோடு, ட்ரம்மை (Drum) சுற்றி ரத்தமாக இருந்துள்ளது. ட்ரம்பில் பார்த்ததில் ஆண் சடலம் ஒன்று துண்டு துண்டாக வெட்டப்பட்ட கவரில் போட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அது அந்த வீட்டில் வசித்து வந்த வளத்தி கோவிலான் என்பது தெரியவந்தது. பின்னர் ஆலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தரணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட வளத்தி கோவிலான் மற்றும் அவரின் மனைவி எழிலரசி இருவரும் விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.வளத்தி கோவிலானை கொலை செய்தது யார் ? அவரது மனைவி எழிலரசி எங்கே ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் ஒருவர் சடலம் பிளாஸ்டிக் ட்ரம்மில் அழுகிய நிலையில் கிடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.