கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 3ம் தேதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருத்த பழைய வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 10 வயது சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை செல்வபுரம் கல்லாமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாஜுதீன். இவருக்கு சொந்தமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ஒன்று அதே பகுதியில் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு பழுதடைந்ததை அடுத்து இவர் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் அவரது 10 வயது மகனான முஹம்மது ஃபாசில் கடந்த் 3ம் தேதி மாலை பழுதடைந்த வீடு இருக்க கூடிய பகுதியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து அந்த வீட்டின் உள்பகுதிக்குள் விழுந்துள்ளது.அதை எடுக்க சிறுவன் உள்ளே சென்ற நிலையில் ஏற்கனவே பெய்த கனமழையால் ஊறி இருந்த வீட்டின் சுவர் திடீரென இடிந்து சிறுவனின் மீது விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறுவனின் அழுகுரலை கேட்டு விரைந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனை அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மருத்துவர்கள் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை சிறுவன் உயிரிழந்தான்.
Leave a Reply
You must be logged in to post a comment.