கத்தார் ராணுவ ரகசியங்களை உளவுப் பார்த்தாக கைது செய்யப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் அனைவரும் அந்நாட்டால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையில் பணியாற்றிய 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள், தனியார் நிறுவனத்தின் சார்பில் கத்தார் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்குப் போர் பயிற்சி அளித்து வந்தனர்.

அப்போது, கத்தார் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாகக் கூறி, கடந்த 2022ம் ஆண்டில், கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சுரபா வாசிக், கமாண்டர் புருண்டு திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகன்கர் பகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, அமிட் நாக்பால், மற்றும் மாலுமி ராஜேஷ் ஆகிய 8 பேரையும் கத்தார் தேசிய பாதுகாப்புபடை கைது செய்தது.
இதனை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரிப் பல முறை மனு அளித்தும் அதனை நிராகரித்த கத்தார் அரசு, அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து கத்தார் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் மரண தண்டனையை சிறை தண்டனையாக குறைத்தது.
இந்நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், 8 பேரின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து இந்திய அரசுக்கும், கத்தார் தூதரகத்திற்கும் மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை எனக்கூறி சென்னை செங்குன்றத்தை சேர்ந்த நந்தகோபாலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக தரப்பில் மத்திய அரசின் கூடுதல் துணை சொலிசிட்டர் ஜெனரல், ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, கத்தாரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் அனைவரும் அந்நாட்டு அரசால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
8 முன்னாள் கடற்படை வீரர்களில் 7 பேர் இந்தியா திரும்ப இருப்பதாகவும், ஒருவர் கத்தாரில் தங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறையின் கோரிக்கையை ஏற்று 8 பேரையும் விடுதலை செய்த கத்தார் அரசுக்கு நன்றி கூறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.