இந்தியாவில் இப்போது பணப்பரி வர்த்தனையை டிஜிட்டல் முறையில் செய்வது மிகவும் எளிதாகி விட்டது. இந்த டிஜிட்டல் மயமானது கடன் பெறும் வசதியையும் எளிதாக்கி உள்ளது. குறிப்பாக பல்வேறு இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகள் கடன் கொடுத்து வருகிறது. டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் பெறப்படும் இந்த கடனானது ‘ஆன்லைன் கடன்’ என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இதனால் பாரம்பரிய வங்கிகளை போன்று அதிக கெடுபிடிகள் எதுவும் இல்லாமல் கிடைப்பது டிஜிட்டல் கடன்முறையின் ஒரு சிறப்பம்சம்.
இதேநேரத்தில் கடன் வாங்கி விட்டு திரும்பச் செலுத்த முடியாத சூழலில் சிக்கிக் கொண்டால், கழுத்தை இறுக்கும் கயிறாகவே மாறிவிடுவது டிஜிட்டல் கடனின் பெரும் அபாயம். கடன் தொகையை செலுத்த தவறும் போதோ, அல்லது தாமதம் ஆகும் போதோ தான், டிஜிட்டல் கடன் எத்தனை அபத்தமானது என்பதை வாங்கியவர்கள் உணர முடியும். அப்போது கடன் வழங்கும் நிறுவனங்கள், அதை வசூலிப்பதற்கென்றே பிரதிநிதிகளை வைத்துள்ளனர். அப்போது வாங்கிய கடனை செலுத்த தவறும் போது, இந்த பிரதிநிதிகள் அவர்களை அணுகுவார்கள்.

முதன் முதலில் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு மிரட்டத் தொடங்குவார்கள். அடுத்த கட்டமாக நமது போன் தொடர்பில் உள்ள நெருக்கமானவர்களிடம், கடன் விவரத்தை கூறி மோசமாக பேசுவார்கள். இதன்மூலம் கடன் பெற்றவரை முடிந்தவரை அவமானத்திற்கு ஆளாக்குவார்கள். இதேபோல் வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு வழிகளிலும் மெசேஜ் அனுப்பி, தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்குவார்கள். அதை தாங்கிக் கொள்ள முடியாத பலர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீதங்களும் தொடர்கிறது,’’ என்பது ஆன்லைன் கடன் வலையில் சிக்கி, கடும் நெருக்கடிகளுக்கு பிறகு மீண்டு வந்த பலரது வாக்குமூலமாக உள்ளது.
இதுகுறித்து சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது;- சம்பள முன்பண கடன், தனிநபர் கடன் என்ற பெயர்களில் ரூ.5000 முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் மிகவும் எளிதாக கிடைக்கிறது. இந்த ஸ்கீமில்தான் நடுத்தர குடும்பத்தினர் அதிகளவில் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது எதிர்பாராத நிகழ்வுகளால் குடும்பத்தில் நிதிச்சிக்கல் உருவாகும் நிலையில், அவர்களால் கடன் தவணையை செலுத்த முடியாது. இந்த நேரத்தில் தான், கடன் செயலிகள் நியமித்துள்ள பிரதிநிதிகள், தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பிப்பார்கள்.
ஏற்கனவே தட்டுத்தடுமாறும் குடும்பசூழலால் மனஅழுத்தம் நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் இவர்கள் கொடுக்கும் குடைச்சலும், பெரும் விரக்தியை ஏற்படுத்தும். இப்படி மனஅழுத்தமும், விரக்தியும் ஒன்றாக வரும் நேரத்தில், மனிதர்கள் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஆன்லைன் கடன் செயலிகளின் குடைச்சலால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆன்ட்ராய்டு போன் வழியாக கடன் தருகிறோம் என்று எந்த ரூபத்தில் அழைப்புகள் வந்தாலும், சற்றும் யோசிக்காமல் உடனடியாக நிராகரிப்பது மட்டுமே அபாயங்களுக்கு தீர்வு தரும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர். தற்போது இன்டர்நெட் சேவைகள் அனைத்தும் இந்தியாவில் எளிதாக கிடைக்கிறது. இதையடுத்து எக்கச்சக்கமான ஆப்கள் வந்துள்ளது. அதை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி நாம் ஒரு ஆப்பை பயன்படுத்தும் போது, மற்றொரு ஆப்பிற்கான விளம்பரம் அதில் வருகிறது. இந்த ஆப்பில் என்ன தான் இருக்கிறது என்று பார்க்க டவுன்லோடு செய்கின்றனர்.
அது கேட்கும் அனைத்து விவரங்களையும் கண்ணை மூடிக்கொண்டு பதிவு செய்கின்றனர். இதன்மூலம் நமது டேட்டாக்கள் எளிதாக திருடப்படுகிறது. இந்த வகையில் தான், கடன் செயலி எனப்படும் லோன் ஆப்களும் நமது செல்போனில் நுழைந்து விடுகின்றன. பின்னர் எளிதாக நமது தகவல்களும் திருடப்படுகின்றன. எளிதாக, அதுவும் உடனடியாக கடன் கிடைக்கும் என்று வரும் தகவல்கள், அனைவரையும் எளிதாக ஈர்த்து விடுகிறது.

இந்த வகையிலும் பலர் ஆன்லைனின் கடன் வாங்கி அவதியில் சிக்கிக் கொள்கின்றனர் என்கின்றனர் தொழில் நுட்ப வல்லுநர்கள். முதன் முதலில் வட்டி இல்லா கடன், மிகக்குறைந்த விகிதத்தில் வட்டி என்றெல்லாம் போட்டு தொடர்ந்து நமக்கு மெசேஜ் அனுப்புவார்கள். நாம் எதிர்பார்க்காத பெரும் தொகையை கூட வெகுசுலபமாக கடனாக பெறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். இதுவே ஆன்லைன் கடனில் நம்மை சிக்க வைப்பதற்கான முதல் வலை. இதன்படி கடனும் கிடைத்து விடும்.
ஆனால், இந்த கடனை பெற்று சில தவணைகள் செலுத்திய பிறகு தான், எவ்வளவு பெரிய வட்டியை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது நமக்கே தெரியும். நாம் இயல்பாக ஒருவரிடம் கடன் வாங்கினால் கந்துவட்டி, மீட்டர் வட்டி என்று வசூலிக்கின்றனர். அதை விட மிகப்பெரிய விகிதத்தில், ஆன்லைன் கடன்களுக்கு வட்டி செல்கிறது,’’ என்பதும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்.
Leave a Reply
You must be logged in to post a comment.