உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூல் செய்ததை கண்டித்து மதுரை கப்பலூர் டோல்கேட் முற்றுகையிட்டு போராட்டம்.
மதுரை மாவட்டம், அடுத்த திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குற்பட்ட டோல்கேட்டில் நேற்று முதல் ஜூலை 10 ஆம் தேதி திருமங்கலம் உள்ளூர் வாடகை வாகனங்கள் அனைத்தும் 50 சதவீதம் சுங்ககட்டணம் செலுத்தி தான் டோல்கேட்டை கடந்து செல்ல வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்தது.

இது திருமங்கலம் உள்ளூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர், பல்வேறு சங்கங்கள் கப்பலூர் டோல்கேட்டை தங்களது வாகனங்களுடன் முற்றுகையிட்டனர்.
திருமங்கலம் எம்.எல்.ஏ உதயகுமார் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர். இதுகுறித்து துவங்கிய போராட்டத்தால் திருமங்கலத்திலிருந்து மதுரை நோக்கியும், மதுரையில் இருந்து தென்மாவட்டங்களை நோக்கியும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது.

இதனால் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைகளுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தினை கைவிட மறுத்ததால் எம்.எல்.ஏ உதயகுமார் உள்ளிட்டோரை கைது செய்து, போலீஸ் வேனில் ஏற்றினர்.
போராட்டக்காரர்கள், போலீஸ் வேனை எடுக்க விடாமல் தடுத்ததால் போலீசார் அனைவரையும் விடுவித்தனர். அதை தொடர்ந்து பொக்லைன் இயந்திரத்துடன் டோல்கேட்டை இடிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை வரும் 15 ஆம் தேதி திருமங்கலத்தில் நடைபெற உள்ளது.
டோல்கேட் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமென்றும், அதுவரை திருமங்கலம் பகுதி வாகனங்கள் கட்டணமின்றி சென்று வரலாம் என முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து சுமார் 9 மணிநேரம் நடந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.