சென்னை, விருகம்பாக்கம் தாங்கல் தெருவை சேர்ந்தவர் வனதேவி (30). இவர் விருகம்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரவி (16).
இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக வனதேவி பணியாற்றி வரும் துணிக்கடையில் விற்பனை உதவியாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். விற்பனையாளர் வனதேவியும், ரவியும் ஒரு பகுதி என்பதால், இருவரும் வேலைக்கு ஒன்றாக செல்வது வழக்கம்.
அப்படி செல்லும் போது, இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது வனதேவி, சிறுவன் ரவிக்கு கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து தன் வசப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில், தனது காதலை வனதேவி சிறுவன் ரவியிடம் கூறியுள்ளார்.

கேட்டதை எல்லாம் வாங்கி தருவதால் ரவியுடம் வனதேவியின் காதலை ஏற்றுக்கொண்டார். பிறகு விடுமுறை நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் வனதேவியின் வீட்டிற்கு தெரியவந்தது.
இதனால் அவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் சிறுவனின் தாய்க்கும் வனதேவியுடன் மகள் தவறான பழகி வருவது தெரிந்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து வெளியூர் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று வனதேவி சிறுவனிடம் கூறியுள்ளார். குடும்ப வறுமை காரணமாக ரவியால் என்ன முடிவு செய்வது என்று தெரியவில்லை.

பிறகு தனது காதலியான வனதேவியின் சொல்படி பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் அதிகாலை 4.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பிறகு வடபழனி முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதை தொடர்ந்து, சென்னையில் இருந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என்று வனதேவி மற்றும் சிறுவன் ரவி ஆகியோர் வெளியூர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று காத்திருந்தனர்.
வீட்டில் தூங்கிய மகன் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், உடனே இருவரும் பணியாற்றும் துணிக்கடைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது இருவரும் வடபழனி கோயிலில் திருமணம் செய்து கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்றது தெரியவந்தது.

உடனே சிறுவனின் தாய் உறவினர்களுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்று தனது மகன் மற்றும் வனதேவியை பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். சிறுவனுக்கு 16 வயதும் வனதேவிக்கு 30 வயது ஆவதால் இருவரையும் சேர்த்து வைக்க முடியாது என்பதால்,
வனதேவியை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கண்டிக்கும்படி கூறி ஒப்படைத்தார். அதன்படி கூடுதல் பணியாக கவனித்து வரும் கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர்,
சிறுவனை திருமணம் செய்த 30 வயது பெண் வனதேவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் ரவியை, உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கு கணவர் ரவி தான் என்று கூறி அவரது வீட்டிற்கு செல்ல வனதேவி மறுத்துவிட்டார்.

அதேநேரம் சிறுவனின் தாய் வனதேவி மீது புகார் அளிக்க மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி போலீசார் வனதேவியை மணப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுவனின் தாய் புகார் அளிக்கவில்லை என்றாலும், சிறுவன் மைனர் என்பதால் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வனதேவி மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருமணம் செய்த சிறுவனுக்கு 16 வயது என்பதால் குழந்தைகள் நல ஆணையமும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 16 வயது சிறுவனுக்கு ஆசை வார்த்தை கூறி 30 வயது இளம் பெண் திருமணம் செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.