மது போதையில் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தீர்த்து கட்டியதாக எடப்பாடி அருகே லாரி டிரைவர் கொலையில் கைதான காதல் மனைவி உள்பட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட நைனம்பட்டி புதியபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசேன் வயது 36. இவர் லாரி டிரைவர். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த நிஷா என்ற பாத்திமாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1 ஆம் தேதி வீட்டில் இருந்த அசேன் திடீரென உயிரிழந்தார். இது குறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் லாரி டிரைவர் அசேனை அவருடைய காதல் மனைவி நிஷா தன்னுடைய தாயார் ரஜியா சித்தி சகிரா பானு ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான நிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் விவரம் பின்வருமாறு; என்னுடைய கணவர் அசேன் வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வரும் அவர், மது போதையில் வருவதுடன் வீட்டில் இருக்கும் அனைவரையும் அடித்து துன்புறுத்தி வந்தார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் அனைவருக்கும் தொந்தரவு கொடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்று, விடு திரும்பிய அவர், வீட்டில் அசைவ உணவு சமைக்கவில்லை எனக்கூறி என்னை அடித்து துன்புறுத்தினார்.
இதனால் அவருடன் கோபித்துக் கொண்டு நான் திருச்செங்கோடு பகுதியில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டேன். 1 ஆம் தேதி அன்று மீண்டும் நான் எடப்பாடியில் உள்ள என்னுடைய தாயார் வீட்டுற்கு வந்தபோது அங்கு மது போதையில் வந்த என்னுடைய கணவர் என்னையும், என்னுடைய தாய் ரஜியா, சித்தி சகிரா பானு ஆகியோரையும் மது போதையில் அடித்து துன்புறுத்தினார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசிதாக தெரிகிறது. அப்போது கோவம் அடைந்த நாங்கள் 3 பேரும் என்னுடைய கணவரின் கழுத்தில் சேலையால் சுற்றி இருக்கியதில் அவர் சுயநினைவு இழந்து கீழே விழுந்தார்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நான் அவசர போலீஸ் 100க்கு போன் செய்து என்னுடைய கணவர் திடீரென மயங்கி விழுந்து விட்டதாக தகவல் தெரிவித்தேன். அப்போது 108 ஆம்புலன்ஸ் உடன் போலீசார் எனது வீட்டிற்கு வந்தனர். என்னுடைய கணவரை பரிசோதனை செய்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தவுடன் என்னிடம் விசாரணை நடத்தினர். அப்போது கொலை வழக்கில் இருந்து தப்பியதற்காக எனது கணவர் தனக்குத்தானே சேலையால் கழுத்தை இறுக்கி கொண்டார். எனக்கூறி சமாளித்தேன். ஆனால் எனது கணவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் போலீசார் தன் என்னிடம் நடத்திய தீவிர விசாரணையில் நாங்கள் 3 பேரும் சேர்ந்து கணவரை சேலையால் கழுத்தை இறுக்கி கொன்றதே ஒப்புக்கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.