ஆழ்வார்பேட்டையில் சேக்மெட் பார் இடிந்து 3 ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில், 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பார் மேலாளர் சதீஷை அதிரடியாக கைது செய்தனர்.
இதனால் பார் இடிந்தது குறித்து கட்டிட வடிவமைப்பு நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளர் அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில், பிரபல மணல்குவாரி அதிபர் ஒருவருக்கு சொந்தமான சேக்மெட் பார் மற்றும் சேமியர்ஸ் ரிகிரியேஷன் கிளப் இயங்கி வருகிறது.
இந்த பார் தரை தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்டது. வழக்கம் போல் நேற்று முன்தினம் பாரின் மேற்கூரையில் அழகு படுத்தப்பட்ட கான்கிரீட் சிலாப் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

அதில் பாரில் பணிபுரிந்த மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மேக்ஸ் வயது (22), திருநங்கை லில்லி வயது (24) மற்றும் கரூர் மாவட்டம் டி.உதயப்பட்டியை சேர்ந்த சைக்ளோன் வயது (48) ஆகிய 3 பேர் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அப்போது மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார். விபத்து பற்றி அறிந்த கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இணை கமிஷனர் தர்மராஜ், மயிலாப்பூர் துணை கமிஷனர் ராஜூவ் சதுர்வேதி ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர்.

மேலும் பார் இயங்கிய கட்டிடம், மிகவும் பழைய கட்டிடம் என்றும், கட்டிடத்தை புதுப்பிக்காமல் உள்பூச்சு பணிகள் மட்டுமே செய்து வர்ணம் பூசி, அழகுப்படுத்தி மதுபான பார் இயக்கி வந்ததே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று கட்டிடத்தின் உறுதி தன்னை குறித்து கட்டிட நிபுணர்கள் குழு ஒன்று இடிந்த கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை ஓரிரு நாளில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விபத்து குறித்து அபிராமபுரம் போலீசார் சேக்மெட் பார் மேலாளரான கோட்டூர்புரம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சதீஷ் வயது (37), ஊழியர்களான விழுப்புரம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்த திலீப் வயது (23), பெரம்பூரை சேர்ந்த பிரதீப் வயது (36), கும்பகோணம் கொட்டையூரை சேர்ந்த வெங்கடேசன் வயது (30),
செஞ்சியை சேர்ந்த ராஜசேகர் வயது (29), திருவெண்ணைநல்லூரை சேர்ந்த தனுஷ் வயது (19), வேளச்சேரியை சேர்ந்த இளமுருகு வயது (35), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கீதப்பிரியன் வயது (25), புவனகிரியை சேர்ந்த சாமுவேல் வயது (23), திருவண்ணாமலையை சேர்ந்த அரிஷ்குமார் வயது (25),

ஆலங்குடியை சேர்ந்த கார்த்திகேயன் வயது (37), திருநாவுக்கரசு வயது (27) ஆகிய 12 பேர் மீது ஐபிசி 304 (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பார் மேலாளர் சதீஷை கைது செய்தனர்.
பார் உரிமையாளர் பிரபல தொழிலதிபர் என்றாலும், பார் பதிவு செய்யப்பட்ட நபரான அசோக்குமார் வயது (45) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர் தலைமறைவாக இருப்பதால் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பற்ற முறையில் பார் இயங்கியதால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சேக்மெட் பாருக்கு சீல் வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.