- கோயில் திருவிழாவில் பாடல் ஒலிபரப்புவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட மெலட்டூர் அருகே கோணியக்குறிச்சிகிராமத்தை சேர்ந்தவர் 23 வயது வினோதகன் அப்பகுதியில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது வினோதகன் கோரிய பாடலை போடுவதற்கு அதே பகுதியைச் சேர்ந்த 46 வயது ரமேஷ் மறுத்துவிட்டார்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வினோதகனை ரமேஷ், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோர் தாக்கி, டியூப்லைட்டை உடைத்து அவரது கழுத்தில் குத்தினர். இதனால் பலத்த காயமடைந்த வினோதகன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இது குறித்து மெலட்டூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ரமேஷ், சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாத தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் அரசு வழக்குரைஞர் இளஞ்செழியன் ஆஜரானார். இந்த வழக்கை நீதிபதி ஆர். சத்யதாரா விசாரித்து ரமேஷ், சந்திரசேகரன், சேகர், ராஜா ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.