ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நாளே மற்றொரு பெரும் சோக சம்பவம் நடந்துள்ளது. டோக்கியோ விமான நிலையத்தில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில், 379 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு விமானத்தில் இருந்த 5 பேர் பலியாகி விட்டனர். ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் 7.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
4 அடி உயர சுனாமி அலைகளும் கடலோர பகுதிகளில் எழும்பி மக்களை அச்சுறுத்தின. இந்த நிலநடுக்கத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட இஷிகாவா மாகாணத்தில் 55 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள் பெயர்ந்து கிடப்பதால் மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புத்தாண்டு தினத்திலேயே இந்த சோக சம்பவம் நடந்த நிலையில், நேற்று தலைநகர் டோக்கியோவின் ஹனேவா சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை 5.45 மணி அளவில் தரையிறங்கியது. அப்போது ஏற்கனவே தரையிறங்கி இருந்த ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம், அதன் நிறுத்த பகுதிக்கு நகர்ந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக 2 விமானங்களும் மோதின. இதில், 379 பயணிகளுடன் வந்த ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையிலேயே தீப்பிடித்தபடி பயணித்தது. விமானம் நிறுத்தப்பட்ட உடன் அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், விமானம் முழுமையாக தீயில் கருகி எரிந்தது. அதே சமயம் மோதலுக்குள்ளான மற்றொரு விமானத்தில் இருந்த 6 பேரில் 5 பேர் பலியாகி விட்டதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தின் கேப்டன் மட்டும் தப்பி உள்ளார். அவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹனேவா விமான நிலையம் தற்காலிகமாக நேற்று மூடப்பட்டது. இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவருமான ஜூனியர் என்.டி.ஆர், ஜப்பான் நிலநடுக்கத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இது குறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜப்பானில் இருந்து இன்று (நேற்று) தான் இந்தியா திரும்பினேன். அங்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்துள்ளேன். கடந்த வாரம் முழுவதும் அங்குதான் இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களை நினைத்து வருத்தமாக உள்ளது. மன உறுதிகொண்ட அம்மக்கள் விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.