இந்த ஆண்டுக்குள்ளேயே 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்படும் என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், அடுத்த செந்துறை அருகே உள்ள சன்னாசி நல்லூருக்கும், கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கும் இடையே உள்ள வெள்ளாறு அரசு மணல் குவாரி தொடர்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு சன்னாசிப்பேட்டை பொதுமக்கள் மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டார். இந்த போராட்டத்தின் போது பிரச்சனை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இது குறித்து 37 பேர் மீது கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜவகர், விசாரணையை ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதன் பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறுகையில்;- போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பின்னர் விரைவில் தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால் தான் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

புதிதாக 7000 பேருந்துகள் வாங்க முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். 350 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. புதிய பேருந்துகள் வர வர பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றப்படும். இந்த ஆண்டுக்குள்ளேயே 15 ஆண்டுகள் பழமையான பேருந்துகள் மாற்றப்படும், என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.