திருக்கோவிலூரில் வெறிநாய் கடித்து 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழையூரில் சிலரை வெறிநாய் கடித்துள்ளது. அங்கிருந்து விரட்டியடித்த நாய்கள், பஸ் நிலையத்தில் புகுந்து பயணிகளை கடித்து குதறியுள்ளது.

பின்னர், யூனியன் ஆபீஸ் ரோடு, வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களில் சாலையில் சென்றவர்களை அடுத்தடுத்து அந்த நாய் கடித்தது. இதுகுறித்து போலீசாரும், பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து நாய் கடித்து காயமடைந்த விளந்தை கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் (72), ஆளூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா (27), விஜயா (48), முடியனூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (53), பனப்பாடி கிராமத்தை சேர்ந்த அஞ்சாமணி (63), திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த வள்ளி (32),

மேல்வாலை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (53), ஜம்பை கிராமத்தை சேர்ந்த மாயவன் (62), வடமருதூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி (17), சைலம் பகுதியை சேர்ந்த சதீஷ் (24), கூடலூர் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி (15), நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்த விஜயசாந்தி (36),
எல்லை கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி (72), திருக்கோவிலூரை சேர்ந்த தனுஷ்நாதன் (15) உள்ளிட்ட 14 பேர் திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் கீதா உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தெரு நாயை விரட்டிச் சென்று பிடித்து அருகே உள்ள வனப்பகுதியில் விட்டுள்ளனர். நாய் கடித்து 14 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.