ஆந்திர மாநிலத்தில் இரு தொடர்வண்டிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட பெரும் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பிற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளி கிராமத்தில் இரு தொடர்வண்டிகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட பெரும் விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தவறான சமிக்ஞை கொடுக்கப்பட்ட மனித தவறின் காரணமாகவே மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்து, அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளதை ஏற்க முடியவில்லை. அண்மைக்காலமாக இதுபோன்று தொடர்வண்டி விபத்துகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையையும், பெரும் ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே, தொடர்ச்சியாக நிகழும் தொடர்வண்டி விபத்துகள் குறித்து முறையான ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறா வண்ணம் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply
You must be logged in to post a comment.