வேண்பாக்கம் வைத்தியநாத சுவாமி கோவிலில் மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேக வழிபாடு. திரளான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை வழிபட்டு சென்றனர் .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.இதையடுத்து தினந்தோறும் சிவபெருமானுக்கும் பார்வதி தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து 48வது நாளான இன்று மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.இதனை முன்னிட்டு வைத்தியநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் விஷேச வழிபாடு நடத்தப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக சங்காபிஷேகம் நடைபெற்றது.பூஜிக்கப்பட்ட கலசங்கள் முன்பு 108 சங்குகளை வைத்து சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினர்.
பின்னர் பூர்ணாஹதி செய்து மஹாதீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் நிறைவாக கைலாய வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சுமந்து ஆலய வலம் வந்தனர்.
இதையடுத்து சிவன் பார்வதிமீதும் இன்னபிற பரிவாரங்கள் மீதும் புனிதநீரானது ஊற்றப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



Leave a Reply
You must be logged in to post a comment.