கும்பகோணம் : கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜராஜ சோழனின் மனைவி பஞ்சமன் மாதேவியின் பள்ளிப்படை கோவிலில் பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ராஜராஜ சோழனின் 5வது மனைவியான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளி படைகோவிலாகும். பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் மீது மிகுந்த பாசம் கொண்டு தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார்.
பஞ்சவன்மாதேவி எங்கு தனக்குக் குழந்தைகள் பிறந்தால் ஆட்சி பீடத்திற்குப் போட்டிக்கு வந்து விடும் என்பதற்காக, தனக்கு குழந்தை பிறக்கக் கூடாது என மூலிகையை குடித்து தன்னை மலடாக்கிக் கொண்டார். இந்த தியாகத்தை செய்த பஞ்சவன்மாதேவியான தனது சிற்றன்னையினை நினைவாக, தான் மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலை ராஜேந்திர சோழன் அமைத்தார்.
சிதலமடைந்து காணப்பட்ட அக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை 67 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இக்கோவிலின் வடக்கு பிரகாரத்தில் இன்று புதிய கருங்கல் தளம் அமைப்பதற்காக தோண்டப்பட்டபோது பாதாள அறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அந்த பாதாள அறையை பார்வையிட்டனர். அந்த அறை முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தொல்லியல் துறையின் அருகே இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே விழுப்புரம் அரசு கல்லூரி வரலாற்றுதுறை பேராசிரியர் ரமேஷ் கல்லூரி மாணவர்களுடன் கோவிலுக்கு வந்து பாதாள அறையை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேராசிரியர் ரமேஷ் ,
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கண்டறியப்பட்டுள்ள இந்த பாதாள அறை ராஜேந்திர சோழன் காலத்தில் படையெடுப்புகளின் போது விக்ரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.