சூலூர் பகுதியில் ஹோட்டல் கடை வைத்து நடத்தி வரும் வட மாநில தம்பதி இருவர் 2 குழந்தைகளை கோவையில் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், பீகாரில் 1,500 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பெண் குழந்தையை சூலூரில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பகீர் தகவலும் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயன். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும் கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் கம்பெனி எதிரே ஹோட்டல் கடை நடத்தி வரும் அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினரிடம் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

விவசாய வேலை செய்து வரும் விஜயன் தனக்கு குழந்தைகள் இல்லாததை பலரிடமும் சொல்லி வைத்து உள்ளார். அவரிடம் பழகிய அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினர் தங்கள் வசம் பிறந்து 15 நாட்களில் ஆன ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும்,
அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளார். விஜயன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவலை சொல்லி உள்ளார்.
பீகாரில் இருந்த அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேக குமாரி ஆகியோர் கடந்த 20 தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து உள்ளனர்.

அவர்கள் ஏற்கனவே பேசியபடி விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் விலைக்கு விற்றுள்ளார். அதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கி உள்ள நிலையில் இன்னும் 70 ஆயிரம் ரூபாய் வர வேண்டி உள்ளது.
இந்த நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து, குழந்தை கடத்தி வந்து விற்பனை செய்ததை உறுதி செய்து உள்ளனர்.

குழந்தை விற்பனையை உறுதி செய்தவர்கள் வாங்கிய நபர் குறித்து தகவல் தெரியாததால் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை செய்து வந்தனர்.
உடனடியாக குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்தவுடன் ஹோட்டல் கடை நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி, மகேஷ் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில்,

ஒரு குழந்தை பெண் குழந்தை மட்டுமின்றி மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு 5 லட்சம் ரூபாய் விலை பேசி விட்டது தெரியவந்தது.
உடனடியாக 2 குழந்தைகளையும் மீட்ட போலீசார் அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.
சிறைக்கு அனுப்பிய தம்பதி தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய போலீசார் குழந்தையை வாங்கியதாக ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாய விஜயனை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் 2 1/2 லட்சம் ரூபாய் பேசி குழந்தையை வாங்கியது ஒப்புக் கொண்டார். அவரையும் கைது செய்து பின் அஞ்சலி, மகேஷ் குமாரின் ஹோட்டல் கடையில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது கிடைத்த தகவலின் பெயரில் அஞ்சலியின் தாயார் பீகாரில் இருந்து குழந்தையை கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகியோரை கோவை வர வழைத்தனர் காவல்துறையினர்.
கோவை வந்த பூனம் தேவி மேகாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பீகார் பகுதியில் உள்ள ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது.

இதை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் 1,500 ரூபாய் கொடுத்து பிள்ளையை தாங்களே வளர்த்திக் கொள்வதாக கூறி எடுத்து வந்து கோவையில் விற்பனை செய்ததை பூனம் தேவி அவரது இளைய மகள் மேகா குமாரி ஒப்புக் கொண்டனர்.
அதை தொடர்ந்து அவர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குழந்தை விற்பனை தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில்,
மேலும் விசாரணை நடத்தி வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.